சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருப்பதால், தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, நவம்பர் 12-ம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.