தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான “ரெட் அலர்ட்”
வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு ஒரே நாளில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது. அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை மறுதினம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுத்துறை (பல்வகை) அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள அரசாணையில், “வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைஉருவாகியுள்ளதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது” என்று அதில் அவர் கூறியுள்ளார்.