திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது.