
24 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் மணக்குள விநாயகர் கோவில் யானை
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல் அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.
யானை லட்சுமியானது கடந்த 31-10-1997-ம் ஆண்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதாவது இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 24 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாளை (திங்கட்கிழமை) 25 வது ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.