
கொவிட் -19 செயலணியினால் சடலங்களை பாதுகாப்பதற்கென வழங்கப்பட்ட கொள்கலன் பெட்டி இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதற்கு போதிய வசதிகள் இன்மையால் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட கொவிட் -19 செயலணியினால் மேலும் 11 சடலங்களை பாதுகாக்கக் கூடிய வகையில் வழங்கப்பட்ட கொள்கலன் குளிரூட்டி இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக் காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்ரம்பர்மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். அதாவது மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் வைத்தியாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.அதாவது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சமயத்தில் 06 தெடக்கம் 0 7 வரையான உடலங்களை பேணுவதற்கான வசதிகளே காணப்படுவதனால் . கொவிட் மரணங்கள் அதிகரிப்பு மற்றும் மாவட்டத்தில் மின்தகன வசதிகள் இன்மை எரியுட்டுவதில் கால தாமதங்கள் ஏற்படுதல் என்பவற்றால் மரணித்தவர்களின் உடலங்கள் தேக்கமடைவது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தெரிவித்ததையடுத்து இறந்தவர்களின் உடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்குரிய கொள்கலனை மாவட்டச் செயலாளர் ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் அதனை பொறுப்பேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படைச் சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கடந்த மாதம் கையளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 06-07வரையான சடலங்களை பாதுகாப்பதற்கு மேலதிகமாக இந்த 11 சடலங்கள் பாதுகாக்கக் கூடிய வகையில் இந்த பிணவறைகளாக மாற்றியமைத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று வரை இது பயன்படுத்தப்படாது மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படுகின்றது இதே நேரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு 06 சடலங்களை வைத்தியசாலையில் உள்ள குளிரூட்டியில் குறிப்பிட்ட நேரம் வைத்து விட்டு அவற்றை வெளியில் எடுத்து விட்டு ஏனைய சடலங்களை வைப்பதாக அறிய முடிகின்றது.