ரஜினிகாந்த் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிச்சாமி
நேற்று முன்தினம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி நேற்று முன்தினம் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினியின் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான், விரைவில் வீடு திரும்புவார் என்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.