
வடக்கில் பல வருட பிரச்சினைக்கு பிரதமர் தீர்வு
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து பரிசுத்த குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தல் மற்றும் நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
இதுவரை யாழ். மாவட்டத்தில் பொதுமக்களில் 14 சதவீதமானவர்களுக்கும், யாழ்ப்பாண நகரத்தில் 4 சதவீதமானவர்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நீர் வழங்கல் முறைமைக்கு பதிலாக இவ்வேலைத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்குமெனவும், நயினாதீவு உட்பட 3 தீவுகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தியமையினால் 3,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ´வடக்கில் தாகத்திற்கு முற்றுப்புள்ளி´ என்ற தலைப்பில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடல் நீரினை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்காக ஒரு கியுபிக் மீட்டர் நீருக்கு, அதாவது 1,000 லீட்டர் நீருக்கு 120 ரூபா நிதி செலவாகின்றது. எனினும் அச்சுத்தமான நீரானது ஒரு கியுபிக் மீட்டரானது 10 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.