
ஆர்யன் கான் விடுதலையால் பூரிப்பில் ஷாருக்கான்
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன்கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆர்யன்கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து வீடு திரும்ப உள்ளார்.
ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்து ஷாருக்கான் கண்கலங்கி தனது உதவியாளருக்கும் வழக்கறிஞருக்கும் நன்றி தெரிவித்தார். ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது வீட்டில் கொண்டாட்ட சூழல் நிலவி வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கின் பிறந்தநாள் வருகிறது. ஆர்யனின் விடுதலை அவருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கப்போகிறது. தனது பிறந்த நாள் மற்றும் தீபாவளிக்கு மகன் தன்னோடு இருக்கப்போவதை நினைத்து ஷாருக்கான் மகிழ்ச்சியிலிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மகிழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் பகிர்ந்துக்கொண்டார்.
சதீஷ் மனேஷிண்டே மற்றும் அமித் தேசாய் போன்ற பிரபல வக்கீல்கள் ஷாருக்கான் மகனுக்கான சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றனர். ஜாமீன் கிடைக்காமல் போனதால், ஆர்யனின் வழக்கறிஞர் குழுவில் முகுல் ரோஹத்கி புதிதாக சேர்க்கப்பட்டார். இந்தியாவின் 14வது அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர் முகுல் ரோஹத்கி என்பதால், எப்படியும் தனது திறமையால் ஜாமீன் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது. 3 நாட்கள் தொடர் வாதம் நடத்தினார் முகுல் ரோஹத்கி. இறுதியாக ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.