
ஆர்யன்கானுடன் செல்பி எடுத்தவர் பிடிபட்டார்
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த இரண்டாம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
மூன்றாவது முறையாக ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆர்யன் கான் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. இவர் போலியாக சான்றிதழ்கள் அளித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார் என தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் கிரன் கொசவி என்பவர் சாட்சியாளராக உள்ளார். இவர் இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாளராக உள்ளார்.
போதை விருந்து வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாக உள்ள கிரன் கொசவியை மராட்டிய போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கிரன் கொசவி மீது 2018 ஆம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு கிரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும், அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், போதைப்பொருள் வழக்கில் சாட்சியாக மாறியுள்ள கிரன் கொசவியை 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் புனே மாவட்ட போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிரன் கொசவி புனே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சாட்சியாக உள்ள கிரன் கொசவியை 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் மராட்டிய மாநில போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.