
யூடியூப் பார்த்து குழந்தை பெற்றெடுத்த மாணவி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தாயார் பார்வை குறைபாடு உடையவர். தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிகிறார்.
அவரது வீட்டின் அருகே வசித்தும் வரும் 21 வயது இளைஞருடன் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்வதாக மாணவிக்கு இளைஞர் வாக்கு கொடுத்திருந்தார்.
கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறிவந்துள்ளார். பெற்றோரும் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளில் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கவில்லை.
கர்ப்பமானதும் ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி மாணவி அவரது அறையிலேயே அதிக நேரம் இருந்துள்ளார். கடந்த 20-ந்தேதி மாணவிக்கு பிரசவ வலி வந்தது. என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது பற்றி யூ டியூப்பில் பார்த்து உள்ளார்.
பின்னர் அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டார். அங்கு யூடியூப்பில் உள்ள உதவிக் குறிப்புகளின் அடிப்படையில், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு மாணவியே தனது தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை எடுத்து உள்ளார்.
திடீரென மேல் மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பெற்றோர், மாணவியின் அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு அழகிய குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர். மாணவியின் பெற்றோர், அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.பின்னர் மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.