
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராமத்தில் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையை எதிர் கொள்வதாக அம்பகாமம் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராமத்தில் 60 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறித்த கிராமத்தில் வாழும் குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நிலையில் உரப்பற்றாக் குறைவு மற்றும் களைநாசினி கிருமி நாசினிகள் இல்லாத நிலையில் குறித்த பிரதேசத்தில் விவசாயத்தை மேற்கொண்டு வரும் விவசாயிகள் யானைத் தொல்லையை தொடர்ந்து எதிர் கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாங்குளம் பிரதான வீதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற இந்த கிராமம் காட்டுவழிப் பாதை ஊடாகவே செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
வீதியின் இருமருங்கிலும் அடர் காடுகள் காணப்படுவதனால் மாலை 6 மணிக்குப் பின்னர் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு யானை அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதால் தமது கிராமத்தை சுற்றி வேலி களை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைத்து வரும் போதும் இன்று வரை அந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக காட்டு யானைகளால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு கூட தமக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.