
கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை - நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான கால போக செய்கைக்கான கால்நடை கட்டுப்பாட்டு திகதி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தற்போது இரவு பகலாக கால்நடைகள் பயிரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் வழமைபோன்று இவ்வாண்டும் இருபத்திஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தநிலையில் முரசுமோட்டை பன்னங்கண்டி மகிழங்காடு ஊரியான் மருதநகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை கால்நடைகள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் இரவு பகலாக கால்நடைகள் பெரும் பயிரழிகளை ஏற்படுத்தி வருகின்றன.கடந்த காலங்கள் போன்று அல்லாது இம்முறை அதிகரித்துச் செல்லும் விலைவாசி காரணமாக விலைகளில் விதை நெல்லைக் கொள்வனவு செய்தும் அதிகூடிய செலவில் நிலங்களை பயன்படுத்தியும் பயிர் செய்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மேலும் பயிர்களுக்கு உரிய உரம் கிடைக்காமை களை நாசினிகள் இன்மை என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பயிர்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் இவ்வாறு கால்நடைகள் இரவு பகலாக பயிர்களை அழித்து வருகின்றன.கடந்த முதலாம் திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இரணைமடு குளத்தின் கீழான பயிர் செய்கை கூட்டத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதி கால்நடை கட்டுப்பாட்டு திகதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதியில் கல்நடைகளை கட்டிப் பராமரிக்க வேண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு தற்போது மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை கால்நடைகளை கட்டுப்படுத்தவில்லை எனவும் மாவட்டத்தின் முதல் நிலை உயர் அதிகாரிகள் கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக கால்நடைகளை கட்டுப்படுத்தி தமது பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.