கோவையில் பேரனை கொன்ற பாட்டி
கோவை அருகே கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 31). கட்டிட வடிவமைப்பாளர். இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இரட்டை குழந்தைகள் என்பதால் குழந்தைகளை பார்த்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) மதுரையில் இருந்து வந்தார். அவர் தனது பேரக் குழந்தைகளை கவனித்து வந்தார். கடந்த 21ம் தேதி ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார்.
ஐஸ்வர்யா திரும்பி வந்து பார்த்த போது அவருடைய 2 குழந்தைகளும் காயத்துடன் காணப்பட்டன. தனது தாய் வீட்டில் இல்லாததையும் கவனித்துள்ளார். இதை பார்த்து பதறிய ஐஸ்வர்யா குழந்தைகளை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ஆண்குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவான சாந்தியின் கணவர், மதுரையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே சாந்தியை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ஞான சேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சாந்தி மதுரையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். அவர்கள், மதுரையில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சாந்தி மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சாந்தியை கைது செய்தனர்.
சாந்தியை போலீசார் கோவைக்கு காரில் அழைத்து வந்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, கைதான சாந்தியிடம் விசாரணை நடத்திய பிறகே அவர் எதற்காக பேரனை கொலை செய்தார் என்பது தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.