
கடலில் தத்தளித்த நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள போர்ட் லாடர்டெய்ல் கடற்கரையில் இருந்து ஜக்கேப் டூடுயிட் தனது நண்பர்களுடன் படகில் அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். அப்போது, கடலில் நாய்க்குட்டி ஒன்று தன்னந்தனியே தத்தளித்துக்கொண்டிருந்தது.
ஜக்கேப் உடனடியாக கடலில் குதித்து தத்தளித்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டார். படகில் இருந்த சக நண்பர்கள் குளிரில் நடுங்கிய நாய்க்குட்டியின் உடலை துவட்டி விட்டனர். நாய்க்குட்டி நடுக்கடலுக்கு எப்படி சென்றது, இது யாருடைய நாய்க்குட்டி என்பது குறித்த விவரம் தெரியாததால் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பட்டையில் நாய்க்குட்டியின் உரிமையாளர் யார் என்பது குறித்து விவரம் தெரிந்தது. அவரை தொடர்பு கொண்ட ஜேக்கப் நாய்க்குட்டி தங்களிடம் பாதுகாப்பாக உள்ளது என கூறினார். கரை திரும்பிய ஜேக்கப்பை நாய்க்குட்டியின் உரிமையாளர் சந்தித்தார். அவரிடம் செல்லப்பிராணியை ஜேக்கப் பத்திரமாக ஒப்படைத்தார்.
நாய்க்குட்டியை படகில் கடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, படகில் யாரும் கவனிக்காத நேரத்தில் நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது. நாய்க்குட்டி படகில் தான் உள்ளது என்ற எண்ணத்தில் அதன் உரிமையாளர் இருந்துள்ளார். ஜேக்கப்பின் அழைப்பை தொடர்ந்தே தனது நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது என்பதையும் அதை ஜேக்கப் மீட்டுள்ளார் என்பதையும் தெரிந்துகொண்டுள்ளார்.