ஆடு, மாடுகள் ருசித்து சாப்பிடுவதற்கான சாக்லேட்டை 2 மாத கால ஆராய்ச்சிக்கு பின்னர் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
இதுபற்றி அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.திவாரி கூறும்போது, “பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சாக்லேட், கால்நடைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பசுந்தீவனம் கிடைக்காதபோது, இதை கால்நடைகளுக்கு மாற்றுத்தீவனமாகவும் பயன்படுத்தலாம். மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் உதவியுடன் இந்த சாக்லேட்டுகள் மாநிலம் முழுவதும் வினியோகிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், கால்நடை அறிவியல் பட்டதாரிகள் இந்த சாக்லேட் தயாரிக்கும் புதிய ஆலைகளை தொடங்குவதற்கு வசதியாக தயாரிப்பு தொழில்நுட்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாக்லேட்டை கால்நடைகள் சாப்பிடுகிறபோது, அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த சாக்லேட்டை கால்நடைகள் அப்படியே சாப்பிடலாம். பிற தீவனங்களுடன் சேர்த்தும் சாக்லேட்டை கால்நடைகளுக்கு தரலாம். ஒரு சாக்லேட்டின் எடை 500 கிராம் ஆகும்.
கால்நடை தீவன தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற கடுகு புண்ணாக்கு, அரிசி தவிடு, வெல்லப்பாகு, ஸ்டார்ச், சுண்ணாம்புத்தூள், உப்பு போன்ற பல பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிற கால்நடை சாக்லேட் ஒன்றின் விலை 25 ரூபாய் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த சாக்லேட் சந்தைக்கு விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.