வேலை திட்டங்கள் நீண்ட பாவனையை இலக்காக கொண்டிருக்க வேண்டும்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நீண்ட காலப் பாவனையை இலக்காக கொண்டதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ள நிலையில், யாழ் மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மெய்நிகர் வழியூடாக நேற்று (26) நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கடந்த காலங்களில் வடகடல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட வலைகள் சுமார் 3 வருடங்களுக்கு வலைகளைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது சுமார் 1 வருடம் மாத்திரமே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் முறையிடுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக, வடகடல் நிறுவனத்தின் தலைவரை அமைச்சர் தொடர்பு கொண்ட போது, கடந்த ஆட்சியாளர்களினால் தரம் குறைந்த வலைகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய நிறுவனத்தின் தலைவர், தற்போது தரமான வலைகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, மீனவர் ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு நஸ்ட ஈடு வழங்குதல், யாழ்.மாவட்டத்தில் தற்காலிகமாக 40 அடிக்கு குறைவான பலநாள் கலன்களுக்கு அனுமதி வழங்குதல், நங்கூரம் இடும் தளங்களை அமைத்து தருமாறு கடற்றொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை, ஐஸ் பெட்டிகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்களை கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு சுதாகரன், கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இன்னும் சில மாதங்களில் அது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.