
பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் என்பவருக்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், சொந்த ஆராய்ச்சி பணிகளுக்காகவும் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களையும், சரக்குகளையும் அனுப்பும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத் திட்டம் என்பது பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது ஆகும்.
அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். வரலாற்றில் முதல் முறையாக தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்கள் நான்கு பேரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேமென்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த பயண திட்டத்துக்கு 'இன்ஸ்பிரேஷன்-4' என பெயரிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கெனவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.32 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் சுற்றுலா பயணிகள் நான்கு பேரை சுமந்து செல்லும் விண்கலத்துடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது.ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் இரண்டாவது அடுக்கு தனியாகப் பிரிந்து, புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. இந்த விண்கலம் அடுத்த மூன்று நாட்களுக்கு பூமியிலிருந்து 575 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும் எனக் கூறப்பட்டுள்ளது.மூன்று நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த லட்சிய பயணத்திட்டத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அவர்களில் ஒருவர் இந்த பயணத்திட்டத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ள ‘ஷிப்ட் 4 பேமெண்ட்' நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன் ஆவார். மற்றொருவர் டென்னிசி மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜூட் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 29 வயதான பெண் டாக்டர் ஹேலே ஆர்சனாக்ஸ்.சிறுவயதில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்துள்ள ஆர்சனாக்சுக்கு இடது செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது. செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் ஆர்சனாக்ஸ் ஆவார். மற்ற இரண்டு பேரும் இந்த பயணத்துக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் ஆவர். அவர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி மற்றும் சியான் பிராக்டர்.42 வயதான கிறிஸ் செம்ப்ரோஸ்கி அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர் ஆவார். தற்போது அவர் டேட்டா என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 51 வயதான சியான் பிராக்டர் ஒரு புவிஅறிவியல் வல்லுநர் ஆவார். கடந்த 2009ம் ஆண்டே நாசாவில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது கல்லூரி பேராசிரியராக உள்ளார். விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள இவர்கள் நான்கு பேரும் இதற்காக 9 மாதங்கள் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது?, எவ்வாறு பயணிப்பது? உள்ளிட்ட பயிற்சிகள் இவர்கள் நான்கு பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.