
அடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்
கொரோனா ஒரு தொற்று நோய் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார மையம் அறிவித்தது. அதனால் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தன.
இதனால் சிறு நிறுவனம் முதல் கூகுள், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கேட்டுக்கொண்டது. இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர்ந்தனர்.
இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதாலும், பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டதாலும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலைப்பார்க்க கேட்டுக்கொண்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இன்னும் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு அழைக்கவில்லை. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10-ந் தேதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படமாட்டார்கள். அழைக்கப்படுவதற்கு முன் சுமார் ஒருமாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்படும் என அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை கூறுகையில், ஏராளமான உலகளாவிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்களுடைய 10 ஆயிரம் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வரவேற்க இருக்கிறோம் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததைவிட இதற்கான ஏற்பாடுகள் சற்று தொலைவில் உள்ளன. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஒன்றிணைவோம் என்றார்.
அலுவலகத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன் 30 நாட்கள் காலஅவகாசம் கொடுப்போம். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூடுதல் ஓய்வு நாட்களை அவர்கள் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.