ஈரோட்டில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம்
தங்க நகைகளில் ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஈரோட்டில் 500-க்கும் மேற்பட்ட நகை கடைகள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் யுனிக் எண் பதிவிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகம் முழுவதும் தங்க நகைகடை உரிமையாளர்கள் இரண்டரை மணி நேரம் கடை அடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் இன்று காலை 9 மணி முதல் 11.30 வரை இரண்டரை மணி நேரம் கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கடையின் முன்பு எதிர்ப்பு பேனர்களை வைத்து அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து நகை கடை உரிமையாளர்கள் கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்வதற்கு 2 மையங்கள் மட்டுமே உள்ளது. இதனால் நகைகளுக்கு ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. வடமாநிலங்களில் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும். ஹால்மார்க் யுனிக் எண் பதிவு மையத்தில் பணியாற்றுபவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து காலதாமதத்திற்கு தீர்வு காண வேண்டும்” என கூறினர்.