“பிறந்தநாளன்று என்னை நேரில் சந்திக்க யாரும் வரவேண்டாம்” – விஜயகாந்த்
ஆகஸ்ட் 25ம் தேதி தனது பிறந்தநாளன்று தன்னை சந்திக்க தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். “இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில் பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன். கொரோனா குறையாத சூழலில் ஆகஸ்ட் 25ம் தேதி எனது பிறந்தநாளன்று நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.