
213ஆவது ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் பற்கேற்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ´அமாதம் சிசிலச´ தர்ம உபதேச தொடரின் 213ஆவது தர்ம உபதேசம் நிகிணி பௌர்ணமி தினமான இன்று (22) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
முதலில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர், அதனை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்கு வருகைத்தந்த ஸ்ரீலங்கா ஷ்வேஜின் நிகாயவின் பிரதி பதிவாளரும், பொகுனுவிட ஸ்ரீ விநயாலங்காராமவாசி, கலாநிதி வணக்கத்திற்குரிய குகுல்பனே சுதஸ்ஸி தேரரை வரவேற்றார்.
பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினங்களிலும் ´அமாதம் சிசிலச´ தர்ம உபதேச நிகழ்வு நடத்தப்படுகிறது.
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட இந்த ´அமாதம் சிசிலச´ தர்ம உபதேசத் தொடர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதன் முக்கியத்தவத்தை வணக்கத்திற்குரிய குகுல்பனே சுதஸ்ஸி தேரர் சுட்டிக்காட்டினார்.
“நாட்டு மக்களுக்கு வெளியில் இருந்து வரும் பாதிப்புகளை தடுத்து அனைவரும் சிறந்து வாழும் சூழலை ஏற்படுத்தியது போன்றே, நம் எவரொருவருக்கும் உள்ளிருந்து எழும் அழுக்கு எண்ணங்களிலிருந்து விடுபட உண்மையான தர்ம போதனையை கேட்கச் செய்து, இலங்கையில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் வாழும் பௌத்தர்கள் அனைவரும் தர்மத்தின் ஊடாக தமது மனதை ஆற்றிக் கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தர்ம உபதேச தொடரை மிகவும் பாராட்டுகின்றோம்” எனவும் வணக்கத்திற்குரிய குகுல்பனே சுதஸ்ஸி தேரர் குறிப்பிட்டார்.அதனை தொடர்ந்து நிகிணி பௌர்ணமி தினத்தின் முக்கியத்துவத்தையும், இவ்வாறானதொரு சூழலில் எவ்வாறு தம்மை தாமே பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பிலும் வணக்கத்திற்குரிய தேரர் விளக்கினார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்ற ´அமாதம் சிசிலச´ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.