
பரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டாக்கில் பிரபலம். அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது வழக்கம். இதனால் ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அந்த பெண் தனது நண்பர்கள் ஆறு பேருடன் மினார் -இ -பாகிஸ்தான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.
லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த டிக்டாக் பிரபலம் தப்பித்து ஓடினார். ஆனால், அந்த கும்பலில் சிலர் அவர் உடைகளை கிழித்தனர். அவரை அங்கும் இங்குமாக தள்ளினர். தரதரவென இழுத்தனர். மேலே தூக்கி வீசினர் இருந்தாலும் அதில் இருந்த சிலர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களாலும் முடியவில்லை.
இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் பற்றிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதில், பரபரப்பு நிறைந்த சாலையில் திறந்த நிலையிலான ரிக்சா ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதில் இரண்டு பெண்கள் நடுவே குழந்தை ஒன்றை வைத்து கொண்டு அமர்ந்துள்ளனர்.
ரிக்சாவை ஒட்டியபடி மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது. அதில் இருந்த ஒரு நபர் திடீரென ரிக்சாவில் தொற்றி கொள்கிறார். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.
உடனே அந்த பெண்கள் அலறி கூச்சலிடுகின்றனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆத்திரத்தில் பெண்களில் ஒருவர் செருப்பு ஒன்றை கழற்றி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நோக்கி அடிக்க முற்படுகிறார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரிக்சாவில் இருந்து இறங்கி செல்ல முற்படுகிறார். எனினும், அருகேயிருந்த மற்றொரு பெண் அவரை தடுத்து அமர வைக்கிறார்.
அந்த ரிக்சாவை சுற்றி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என ஆண்கள் பலர் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியுடன் காணப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.