
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரமில்லை
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரமில்லை 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன். தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.
எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.
எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது.
அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது. எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.
அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.
இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும்.
அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும்.
இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.