
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களை மீட்கும் வரை படைகள் தங்கியிருக்கும் – ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கடைசி நபரும் வெளியேறும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் இதைத் தெரிவித்தார். காபூல் நகரில் விமானத்தில் இருந்து கீழே விழுந்தவர்கள் பற்றிய கேள்விக்கும் ஜோ பைடன் பதில் அளித்திருக்கிறார்.ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரையும் மீட்பதற்கு முயற்சி செய்வோம். இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து மீட்புப் பணிகளை முடிப்போம் என்று ஜோ பைடன் தெரிவித்தார். சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இன்னும் தங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் தவிர அமெரிக்காவுக்காகப் பணியாற்றிய சுமார் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரையிலான ஆப்கானியர்களையும் மீட்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.தாலிபன்கள் இந்த வேகத்தில் முன்னேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறினார். காபூலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தவிர்க்க முடியாததது என்றும் அவர் தெரிவித்தார்.தற்போது ஏராளமான வெளிநாடுகள் தங்களது குடிமக்களையும் அதிகாரிகளையும் மீட்பதற்காக காபூல் விமான நிலையத்துக்கு ராணுவ விமானங்களை அனுப்பி வைத்துள்ளன. இதனால் காபூல் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 4,500 வீரர்களின் கட்டுப்பாட்டில் தற்போது காபூல் விமான நிலையம் உள்ளது. ஆனால் அதைச் சுற்றி பல இடங்களில் தாலிபன்கள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏராளமான அமெரிக்கர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் அனைவரையும் மீட்பதற்கு எங்களிடம் போதிய வசதிகள் இல்லை என்று அவர் கூறினார்.ஆனால் அதிபர் ஜோ பைடனின் கருத்து வேறுமாதிரியாக இருந்தது. அமெரிக்கர்கள் யாராவது அங்கே இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவரையும் மீட்கும்வரை அங்கே இருப்போம் என்றார் பைடன்.ஏற்கெனவே சுமார் 5 ஆயிரம் அமெரிக்கர்களை மீட்டிருப்பதாகவும், ஒரு நாளைக்கு 9 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் மீட்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.தூதரக அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், சில ஆப்கானிஸ்தானியர் ஆகியோர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டிருப்பதாக மேற்கு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். அவசர அவசரமாக வெளியேறியது தவறு என நினைக்கிறீர்களா என ஏபிசி செய்தியாளர் பைடனிடம் கேட்டபோது, இல்லை என்று அவர் பதிலளித்தார். பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து மக்கள் கீழே விழுவது போன்று வெளியான காணொளி குறித்தும், அமெரிக்காவின் C-17 ராணுவ விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டிருந்தது குறித்தும் பைடனிடம் கேட்கப்பட்டது. அதற்கு "அது நான்கைந்து நாள்களுக்கு முந்தையது" என குறுக்கிட்டுப் பதில் கூறினார் பைடன்.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பறுவதற்கு வாய்ப்புக் குறைவு என்று தாம் கூறியது கடந்த மாதத்தில்தான் என்றும்,.இவ்வளவு வேகமாக தாலிபன்கள் முன்னேறியதற்கு ஆப்கானிஸ்தான் அரசும் அவர்களது ராணுவமும்தான் காரணம் என்றும் பைடன் குற்றம் சாட்டினார்.பிபிசியிடம் பேசிய உளவுத்துறை வட்டாரங்கள், "ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்குவதில் உள்ள அபாயங்களை பைடன் வெகு முன்னரே புரிந்து வைத்திருந்தார்" எனக் கூறின. இது நிச்சயமாக உளவுத்துறையின் தோல்வி அல்ல என்று முன்னாள் சிஐஏ அதிகாரியான பால் பில்லர் கூறுகிறார்.
உலகின் பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது குடிமக்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுப்டடு வருகின்றன. ஆனால் விமான நிலையத்துக்குச் செல்லும் பாதைகளை தாலிபன்கள் அடைத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக அமெரிக்கா 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை மீட்டு வந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பிரிட்டன் சுமார் 1,200 பேரையும் ஜெர்மனி சுமார் 500 பேரையும் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருக்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த 170 பேர் ஒரே விமானம் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்டனர்.