
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நெரிசல் - 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்துக்காக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ படைகளை 2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களிடம் இருந்து நாட்டை முழுமையாக மீட்டது.
தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தலிபான்களை முழுமையாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால் தனது படைகளை அங்கேயே நிறுத்தி வைத்தது. ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க படைகளால் தலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
எனவே முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
அதில் ஆப்கானிஸ்தானில் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என தலிபான்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்ப பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
அதன்படி கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இதுவரை பதுங்கியிருந்த தலிபான்கள் பாய தொடங்கினர்.
ஆப்கானிஸ்தானில் பெருமளவிலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இருந்து தப்பும் முயற்சியில் கடந்த 2 நாட்களாக மக்கள் விமானங்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க படைகள் மற்றும் பிற நாட்டு படைகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றுவதற்காக காபூல் விமான நிலையத்தில் உள்ளனர். இருந்தபோதிலும், அந்நாட்டு மக்கள் அனைத்து பகுதிகளில் இருந்தும் விமான நிலையத்திற்குள் நுழைந்து முன்னேறியுள்ளனர்.
இதனால் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அவர்களை விரட்டியடிக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், இதுவரை 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்க படைகளின் துப்பாக்கி சூட்டில் 2 பேரும், அமெரிக்க ராணுவ விமானம் மேலெழும்பி பறந்தபோது, அதனை பிடித்து தொங்கிய 2 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.