
காபூலில் பதற்றம் - விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்ற மக்கள்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்துக்காக தலீபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ படைகளை 2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களிடம் இருந்து நாட்டை முழுமையாக மீட்டது.
தலீபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தலீபான்களை முழுமையாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால் தனது படைகளை அங்கேயே நிறுத்தி வைத்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க படைகளால் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
எனவே முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என தலீபான்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்ப பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், அதுவரை பதுங்கியிருந்த தலீபான்கள் பாய தொடங்கினர்.
அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களையும், அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளையும் தலீபான்கள் கைப்பற்றினர். குறிப்பாக கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களின் தலைநகரங்களை தலீபான்கள் தங்கள் வசம் ஆக்கினார்.
தலீபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். எனினும் படை பலத்தை பயன்படுத்தி காபூலை கைப்பற்ற விரும்பவில்லை என தெரிவித்த தலீபான்கள் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறினர். காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் பீதியடைந்த உள்ளூர் அரசு அதிகாரிகள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். அதேபோல் காபூல் நகரை சேர்ந்த பொதுமக்களும் உயிருக்கு பயந்து அண்டை நாடான பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. தலீபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க இருப்பதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு பிற நாடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் காபூலில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். விமானத்தில் முண்டியடித்து ஏற முயன்றனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டடனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் கூறும்போது, எனக்கு இங்கு இருப்பது பயமாக இருக்கிறது. வான்வழித் தாக்குதல்கள் நடக்கின்றன என கூறினார்.