
சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் நாளை தேசிய கொடியை ஏற்றி வைப்பதால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினவிழாவையொட்டி காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். சென்னையில் 20ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் முக்கிய இடங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பிரசித்தி பெற்ற பிரபல கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்லவில்லை.கடல் வழியாக மர்மநபர்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக கடலோர பகுதிகள் அனைத்திலும் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடலோர பகுதிகளில் வசிப்பவர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அது பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை யாரும் வெளியிட்டுள்ளார்களா? என்பது பற்றி தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ள போலீசார் அது போன்ற நபர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.