
நாட்டை முடக்குவதானால், மனோ அவசர வேண்டுகோள்
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த நிதி அல்லது உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு அரசு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த முறையை போன்று பாராளுமன்றத்திலும், வெளியேயும் கொழும்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எம்பீக்களான எங்களையும், நிராதரவாகும் அப்பாவி மாநகர மக்களையும் போராட வைக்க வேண்டாம் என கூறி வைக்க விரும்புகிறேன். இது தொடர்பில் சற்று முன் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் மேஜர் பிரதீப் உதுகொட எம்பியிடம் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
நாடு முடக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் மனோ எம்பி இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தொகை நிதி தேவைப்படும் என்பது உண்மைதான். அதேவேளை குடும்ப தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும் தங்கள் குடும்பங்களை கொண்டு நடத்த, பிள்ளைகளை வாழவைக்க வேறு வழிகள் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.
தடுப்பூசிகள் பெறுவதற்கு பெருந்தொகை நிதி உதவிகள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை தந்து உதவின. பல நட்பு நாடுகள் அன்பளிப்பாக தடுப்பூசிகளை தந்து உதவின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், நிதி திரட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக எந்தவித வழி வாய்ப்புகள் இல்லாமல், வீட்டு தோட்டங்கள் எதுவும் இல்லாமல், கட்டிடங்களுக்கு மத்தியில், வாழும் மாநகர ஏழை மற்றும் மத்திய தர மக்களுக்கு, நாட்டை மூடுவதானால், நிவாரணம் வழங்கியே ஆக வேண்டும். இதற்கான நிதியை அரசாங்கம் ஏனைய அபிவிருத்தி, திட்டங்களை இடை நிறுத்தி, திரட்டியே ஆக வேண்டும்.