
ஜப்பானில் நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
பிரவீன் காந்தி 1974 இல் அம்பாலாவில் இருந்து டோக்கியோவை அடைந்து ஒரு ட்ராவல் கம்பெனியை துவக்கினார். நான் இங்கு வந்தபோது, சில இளைஞர்களுடன் ஒரு சிறிய அறையில் வசித்தேன். எங்கள் அறையில் குளிப்பதற்கு வசதி இல்லாததால் நாங்கள் பொது குளியலறைக்கு சென்று குளிப்போம். எங்களைப் போன்ற பலர் பொதுக் குளியலறையில் குளிக்க வருவார்கள்.
நான் முழுவதும் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன், அது எனக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இந்தியாவில் சூழ்நிலை வேறு. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது குளங்களில் இவ்வாறு குளிப்பது வழக்கம் என்று பிரவீன் கூறுகிறார்.
இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது, என்னால் அடிக்கடி இப்படி குளிக்க முடியவில்லை. அவர்கள் என்னை ஒரு வெளிமனிதராகப் பார்த்தனர். முற்றிலும் நிர்வாணமாக குளிக்க எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. அதன் பிறகு எல்லாமே மாறிவிட்டது.. இப்போது நான் அவர்களில் ஒருவனாக மாறிவிட்டேன் என்கிறார் பிரவீன்.
ஜப்பானியர்களுக்கு குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சூடான நீரில் குளிப்பது அவர்களது பாரம்பரியம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அது நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பது எனக்குத் தெரியாது.
இந்தியர்கள் அனைவருமே பொதுவாக கூச்ச சுபாவமுள்ளவர்கள். வெளிநாட்டு ஜப்பானியர்களுக்கு முன்னால் உடைகளை களைவது பெரும் சங்கடமாக இருந்தது, என்று டோக்கியோவில் உள்ள மற்றொரு இந்தியரான சத்னாம் சிங் சன்னி குறிப்பிட்டார். சத்னம் சிங் ,1973 ஆம் ஆண்டில் அம்ர்தசரிஸில் இருந்து ஜப்பானுக்கு சென்றார். அங்கு அவர் இந்திய உணவகத்தை தொடங்கினார். அதை அவர் சமீபத்தில் விற்றுவிட்டார்.
ஜப்பானின் மக்கள் தொகை 12.6 கோடி.அதில் 38,000 பேர் இந்தியர்கள். இந்த எண்ணிக்கை அவ்வளவு பெரியது அல்ல. குடியேற்றம் மிகவும் எளிதானது அல்ல என்பதே இதற்குக் காரணம் என்று ஜப்பானில் வாழும் இந்தியர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இப்போது ஜப்பானில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பல இளைஞர்கள் வேலைக்கு வருகிறார்கள்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பல தசாப்தங்களாக வாழும் பல இந்தியர்களுடன் நான் பேசினேன். தாங்கள் ஜப்பானில் குடியேற முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்..
உஜ்வல் சிங் சாஹ்னி 54 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்து ஜப்பானில் குடியேறினார். ஜப்பானிய அகராதியில் மற்ற மொழிகளைப் போல அவதூறுச்சொற்கள் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் அமைதியை விரும்பும் மக்கள், இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
இரவு இரண்டு மணிக்கு எந்தப் பயமும் இல்லாமல் ஒரு பெண் இங்கு நடந்துசெல்வதை பார்க்கமுடியும், என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த வி.பி. ரூபானி சுட்டிக்காட்டினார். 2011 சுனாமி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது, ஜப்பானிய தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்யத் தயாராக இருந்தனர். இது ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விஷயம் என அவர்கள் சொல்வார்கள், என்று சத்னாம் சிங் குறிப்பிட்டார். ஜப்பான் மக்களைப் பற்றி இன்னொரு சுவாரசியமான விஷயத்தை அவர் தெரிவித்தார். இங்கே ஹோட்டல் ஊழியர்கள் தங்கள் விருந்தினரிடமிருந்து எந்த டிப்பும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எங்கள் வேலை, எனவே டிப் வேண்டாம் என்று அவர்கள் பணிவுடன் சொல்கிறார்கள் என்கிறார்.