
மேஜை மீது ஏறி அமளி - வெங்கய்யா நாயுடு கண்ணீர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
இரு அவைகளும் 16 வது நாளாக முடங்கியது. இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாகக் கண்ணீர் விட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு அவையில் எல்லை மீறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
வெங்கைய்யா நாயுடு வேதனையுடன் கூறியதாவது:- நேற்று சில உறுப்பினர்கள் மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்; இந்த சம்பவங்களால் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது. நான் மிகவும் வேதனை அடைந்தேன். மிகவும் வருத்தமுற்றேன். ... என் வேதனையை தெரிவிக்க எனக்கு வார்த்தை இல்லை. நான் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தேன் ...
இதைச் செய் அல்லது அதைச் செய் என நீங்கள் எந்த அரசாங்கத்தையும் கட்டாயப்படுத்த முடியாது ... நேற்று, ஒரு பிரச்சினையை எழுப்பிய போது விவாதம் அனுமதிக்கப்பட்டது. கருத்து வேறுபாடு இருக்கலாம்.. விவாதிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம், வாக்களிக்கலாம்.அனைத்து எம்.பி.க்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். சபையின் கருவறைக்குள் நுழைவது ஒரு புனிதமான செயல் என்று வெங்கையா நாயுடு கூறினார்.