காதலியை ஏமாற்றிய இராணுவ வீரருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி
ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாலதி என்கின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் உதயகுமார் என்பவர் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
உதயகுமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாலதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
ராணுவ வீரர் உதயகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் ஜாமின் வழங்க முடியாது என்றும் உதயகுமார் வேலூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிபதி ( தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ) முன்பு இரண்டு வாரத்திற்குள் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிபதி முன்பு உதயகுமார் ஆஜரானார்.
மாலதி தரப்பு வழக்கறிஞர் கிஷார் பாட்ஷா வாதாடும் போது, அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு சென்று தலைமறைவாகி விடுவார் என்றும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கூறினார். உதயகுமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதனையடுத்து இராணுவ வீரர் உதயகுமாரை வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.