பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் - உதயநிதி உருக்கம்
முதல்முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஸ்டாலின் ஆட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். அவரது வாரிசான உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
அடுத்த திமுக தலைவர் உதயநிதிதான் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் நற்பெயரை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் சேப்பாக்கம் தொகுதியிலேயே முகாமிட்டுள்ள அவர், அடிக்கடி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்.
கொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுப்பது, தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளச் செய்வது என முழுநேர அரசியலில் தீயாய் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாததை போன்றே, அவரது நினைவு நாளிலும் அமைந்து விட்டது.
திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டுவிட்டரில் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
முத்தமிழறிஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் என்னை துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்.
தன் போராட்ட பெருவாழ்வு மூலம் கோடான கோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து,தன் அண்ணனின் பக்கத்தில் ஓய்வெடுக்கும் சமூகநீதி சூரியன் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான இன்று மலர்தூவி மரியாதை செய்தோம். வாழ்க கலைஞரின் புகழ் என தெரிவித்துள்ளார்.