வழிபாட்டு தலங்களில் 3 நாட்கள் பொது மக்களுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தினமும் கூடிவருகிறது.
இது கொரோனாவின் 3-வது அலையின் தொடக்கமாக இருக்குமோ? என்று எல்லோரும் அச்சமடைந்த நிலையில், 2-வது அலையே இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு வரும் 9-ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை மேலும்2 வாரத்திற்கு நீட்டிப்பது என்றும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.