பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உயர்கல்வித்துறை உத்தரவு
கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆகஸ்டு 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதால் அன்று முதல் பேராசிரியர்கள் பணிக்கு வர தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்துவிட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால், கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு இம்மாதம் 9ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் துவங்க உள்ளன.
பொறியியல் மாணவர்களுக்கு இந்த மாதம் 18ம் தேதி துவங்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடக்கவுள்ளன. இவர்களுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி செய்முறைத் தேர்வும், டிசம்பர் 13ம் தேதியில் செமஸ்டர் தேர்வும் நடக்கவுள்ளது.
இதைத்தவிர எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மாணவர்களுக்கு இம்மாதம் 18ம் தேதியில் ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, 2021-2022-ம் கல்வியாண்டில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் முதல் ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு இம்மாதம் ஆகஸ்டு 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.
அனைத்து அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பேராசிரியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.