பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்?
சென்னையில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகள் இடித்து தள்ளப்பட்ட நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குரல் கொடுக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அரும்பாக்கத்தில் உள்ள ஆர்கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
அரும்பாக்கத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. எந்தவித நோட்டீசும், மாற்று வீடுகளும் தராமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். வீடுகளை இடித்து வெளியேற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ணீருடன் வீதிகளில் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது.
சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், பட்டியலின மக்களின் உரிமைக்காகவே கட்சியை நடத்தி வருவதாக கூறி வரும் திருமாவளவன் இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காதது அரும்பாக்கம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் திருமாவளவன் விமர்சனத்திற்கு உள்ளாவதை தவிர்க்க, தனது கட்சி நிர்வாகியான வன்னியரசு மூலம் பொத்தாம் பொதுவதாக ஒரு டுவிட் போடச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.
களத்திலும், திரையிலும் பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக அருகம்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆட்சியின் போது சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகளை அகற்றினர். அப்போதைய அரசைக் கண்டித்து கூவம் நதியில் இறங்கி அப்பகுதி மக்கள் போராடினர். போராட்டத்தில் இறங்கிய மக்களை இயக்குநர் பா. ரஞ்சித் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார்.
தற்போது திமுக தலைமையிலான அரசு அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வரும் நிலையில், இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவோ, தி.மு.க அரசுக்கு எதிராகவோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.