கொரோனா 3வது அலை - தமிழக சுகாதாரதுறை செயலாளர் விளக்கம்
இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையை விட கொரோனா இரண்டாவது அலையில் தீவிர பாதிப்புகளும், அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தோருக்கு, கருப்பு பூஞ்சை நோய் தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து வெள்ளை, மஞ்சள், பச்சை என்றும் பூஞ்சை நோய் தொற்று மக்களை வாட்டி எடுத்தது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தீவிரம் குறைந்து வந்தது. எனினும், அடுத்த சில மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசார நிகழ்வை தொடக்கி வைத்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா 3வது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, தமிழகம் முழுவதும் ஒரு வாரகாலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு 25 சதவீதம் அளவு படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.