தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள வசதி
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அத்துடன், இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் http://www.slbfe.lk/ என்ற இணையதளத்தினூடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இந்த தடுப்பூசி, முதல் தினத்தன்று, மேல்மாகாண இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, அதற்கான ஆவணங்களைப் பூர்த்தி செய்த தொழிலாளர்களுக்கே வழங்கப்படும் என்று கைத்தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பல நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது பைசர் தடுப்பூசி என்பதனால், வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்குவதற்காக அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இலங்கை இராணுவ வைத்தியர் குழுவினரின் முழு ஆதரவோடு, இராணுவ மருத்துவமனையில் இந்தத் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
வெளிநாடு செல்ல இருக்கும் 1200 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.