தகைசால் தமிழர் விருதினை முதலாவதாக பெறும் என்.சங்கரய்யா
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு தகைசால் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் முதல் விருது என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக தகைசால் தமிழர் என்ற புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த விருது முதலாவதாக பொதுவுடமை இயக்க தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான என்.சங்கரய்யா, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். இவர் சமீபத்தில் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆகஸ்டு 15 சுதந்திர தினவிழா அன்று என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதும், ரூ.10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.