பேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்
திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. பேருந்து வெளியே வந்த போது, குடிபோதையில் தள்ளாடியபடி வந்த இளைஞர் ஒருவர் பேருந்தை வழிமறித்து நிறுத்தினார்.
குடிபோதையில் இருந்த இளைஞர் பேருந்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்தும், பேருந்தின் முன்பகுதியில் ஏறி நின்றும் ரகளையில் ஈடுபட்டார். ஓட்டுநர் எவ்வளவு எடுத்துக் கூறியும் இளைஞர் நகர்ந்த பாடில்லை. பேருந்துக்கு அடியில் படுத்துக் கொண்டும் ஓட்டுநரை படாதபாடு படுத்தியுள்ளார்.
இளைஞரின் இந்த சேட்டையால் ஓட்டுநரும், நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனர். நீண்ட நேர ரகளைக்கு பிறகு போதை இளைஞர் வழிவிட்டு ஒதுங்கினார். இதனையடுத்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரித்ததையடுத்து, குடிக்கு அடிமையான ஆசாமிகள் அவர்களுக்கு மட்டுமின்றி பொது இடங்களிலும், பொதுமக்களுக்கும் எராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றனர்.