இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம் - சீனா
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமூகமான நிலையில் இல்லை.
இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை வெளியுறவு மந்திரி வெண்டி ஷெர்மன் சீனா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற ஆறு மாதத்துக்கு பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் சீனாவுக்கு சென்று நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும். வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா-சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கும் சூழலில் இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது. மிகவும் தவறான வழிகாட்டுதலையும், ஆபத்தான கொள்கையையும் அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.
துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் கூறுகையில், “சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அடக்கவும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம், சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே ஆகும்” என கூறினார்.