ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது - பியால் நிஷாந்த
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (24) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்´ எமது அமைச்சிற்கு பொறுப்பு உள்ளதா என்பது குறித்து மக்கள் இன்று கவனம் செலுத்துகிறார்கள்.
எனவே இந்த சிறுமிக்கு நீதியினை நிலைநாட்ட வேண்டுமானால் அல்லது இந்த சிறுமியின் மீது அக்கறை இருந்தால் நாம் அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து நீதியினை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைய வேண்டும்.
நாம் தினந்தோறும் கால்வாய்கள், வீதிகள், அதிவேக நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றையே நாம் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த நாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து ஒரு போதும் பேசுவதில்லை. தொடர்பாடல்கள் தொடர்ந்து காணப்படுமாயின் இவ்வாறு சிறுவர்களை நாம் இன்று இழந்திருக்கமாட்டோம்.
நாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து தற்பொழுது 9 மாகாணங்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். சிறுவர்கள் தொடர்பாக இலங்கையில் இரண்டு நீதிமன்றங்கள் மாத்திரமே உள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சிறுவர்கள் தொடர்பான நீதிமன்றங்களை அமைக்க நீதி அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸோடு எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது. நாம் கால்வாய்களுக்கும், வீதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது போல் இந்த நாட்டின் சிறுவர்களுக்கும் பாதுகாப்பினை வழங்க நாம் அனைவரும் வீதிக்கு இறங்கி செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.