ஹிஷாலினியின் மரணம் : 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலங்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான பொன்னையா சங்கரின் வங்கி கணக்கு தொடர்பிலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அக்கரபத்தனை பகுதியிலுள்ள வங்கியொன்றின் கிளையிலேயே, பொன்னையா சங்கர் தனது வங்கி கணக்கை நடத்திச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்திச் செல்லப்படும் வங்கி கணக்குக்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவின் தந்தை மற்றும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நான்கு சந்தேகநபர்களும் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்படி, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்களை நாளை (26) வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.