ஹிஷாலினி தொடர்பாக நாம் எமது கடமையை சிறப்பாக செய்துள்ளோம்
மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?
சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் எமது கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.
அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் பற்றி அவர் மேலும் கூறியதாவது, இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.
சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின் மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.
இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.
ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
சிங்கள, முஸ்லிம் மக்கள் தொடர்பிலே மிகக்கூடிய கரிசனை கொண்டவர்கள். தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்க வேண்டும் என வெளிப்படையாக இதய சுத்தியுடன் செயற்படுகின்றவர்கள் நாங்கள்.
நாங்கள் இது எந்த வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கோ அல்லது அவருடைய கட்சிக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ ஒரு சமூகத்திற்கெதிரானது அல்ல. நீதிவேண்டிய ஒரு பயணம். அந்த நீதியை அவர் நிலைநாட்ட வேண்டும் என்பதைதான் கட்டாயமாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.