பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக விளங்கி வருகிறது. மொத்தம் 340 அறைகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
டெல்லியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து) ஜனாதிபதி மாளிகைக்கு சுற்றுலா அனுமதிக்கப்படும்.
செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து), காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.