வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் 251 மில்லியன் ரூபா வருமானம்
கொவிட் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனால் இதுவரை 251 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இவ்வாறு அறவிடப்படும் வரித் தொகையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இதன் ஊடாக உள்நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தொலைக்காட்சிக் கலை மற்றும் இத்தொழில்துறையை பாதுகாத்து, இந்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
கொவிட் தொற்றுநோய் சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிகளை 16 மணித்தியாலங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக செலவிடப்படும் தொகை 22 மில்லியன் ரூபாவாக இருக்கின்ற போதும், 4 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத் தொலைக்காட்சி சேவைகள் தமது பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து, புதிய நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், இந்த வருட இறுதியில் இதனை வருமானம் ஈட்டும் மட்டத்துக்குக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
கொவிட் தொற்றுநோய் சூழல் காரணமாகப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊடக நிறுவனங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் சவால் தனது அமைச்சுக்குக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.