நாடாளுமன்றத்தில் புகுந்த எலி பெண் எம்.பி.க்கள் அலறல்
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டு இருந்தது. எம்.பி.க்கள் சுசானா டயஸை செனட்டராக நியமிக்க கோரும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க தயாராகி கொண்டு இருந்தனர்.
அப்போது எலி ஒன்று எம்.பிக்கள் காலில் ஏறி அங்கும் இங்கும் ஓடியது. இதனால் பெண் எம்.பிக்கள் கதறியபடி ஓடினர். சிலர் கத்தி கூச்சலிட்டவாறு வெளியே ஓடினர். இதை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர் எலி ஒருவாராக வெளியேற்றப்பட்டதும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் தொடங்கின. எம்.பிக்கள் மீண்டும் கூடி, அந்தலுசியன் தன்னியக்க சமூகத்தின் செனட்டராக பெர்னாண்டோ லோபஸ் கிலுக்கு பதிலாக சுசானா டயஸை தேர்ந்து எடுத்தனர் .
நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஏற்படுத்திய களேபர வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.