ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பந்துல கருத்து
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதாயின் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் வரி அதிகரித்தல், அரச சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது கடன் வாங்குதற்கு நேரிடுமென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு கிடைத்த வரி வருமானம் 1,216 பில்லியன் ரூபாய்களாவதுடன், 1,052 பில்லியன் ரூபாய்கள் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு செலுத்திய பின்னர் வரி வருமானத்தில் அரசாங்கத்திற்கு 164 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே எஞ்சுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ´வாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு´ தொடர்பாக பொது மக்களைத் தெளிவூட்டும் செய்தியாளர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையை இணைந்த சேவையாக மாற்றி சம்பளம் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்து பரந்த உரையாடல் மூலம் ஆசிரியர்கள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தார்.