சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஜென்சூ நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஆறுகளாக மாறிவிட்டன. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வானிலை மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 3 நாட்களில் மட்டும் 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் வெள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.