மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா - இடைக்கால அறிக்கையை கையளிப்பு
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தது. இந்த நிகழ்வு. நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் அவர்களைத் தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்று யாழ்ப்பாண முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.