சிறுமியை திருமணம் செய்த இரு இளைஞர்கள்
பவானியில் சிறுமியை திருமணம் செய்த இரண்டு நபர்கள் உள்பட 6 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியில் அப்புசாமி-நாகமணி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 18 வயது நிறைவடையாத மகள் உள்ளார்.
அப்புசாமி இதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது மகளை சேலம் மாவட்டம் காவேரிபுரம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரும் தலை ஆடியை கொண்டாடுவதற்காக சிறுமியின் சொந்த ஊரான காடப்பநல்லூருக்கு செல்ல பவானி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, சிறுமியை பள்ளி பருவத்தில் காதலித்து வந்த சேலத்தை சேர்ந்த அஜித் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று அருகில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் உதவியுடன் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர் சிறுமிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது , கடத்தி சென்று குழந்தை திருமணம், இதற்கு இரண்டு நபர்களின் வீட்டார் உடந்தையாக இருந்தது தெரியவந்தததை அடுத்து சிறுமியை திருமணம் செய்த காமராஜ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சிறுமியின் பெற்றோர் நாகமணி, அப்புசாமி, குப்புசாமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய நான்கு பேர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.